நட்புடன் ஐந்து நண்பர்கள்

இயற்கை எழிலுடன் கூடிய ஒரு அழகான கிராமத்தில் ஐந்து நண்பர்கள் வசித்து வந்தார்கள். தினமும் ஒன்று கூடி விளையாடுவது, பள்ளிக்குச் செல்வது, அரட்டை அடிப்பது, மீன் பிடிக்கச் செல்வது என்று சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள். 

அது கோடை காலமாக இருந்ததால் அனைவரும் விளையாடி மிகவும் களைப்படைந்து விட்டார்கள். எனவே “தேங்காய் தாத்தா” வீட்டிற்குச் சென்று இளநீர் பறித்துத் தரச் சொல்லிக் குடிக்கலாம் என்று நினைத்தார்கள்.

 தேங்காய் தாத்தா வீட்டை நெருங்கிய போது “பவ்வ் பவ்வ், பவ்வ் பவ்வ்” என்று சத்தம் கேட்டது. அட அது யாருன்னா! நமது “தேங்காய் தாத்தா” வளர்த்து வரும் “டாமி” நாய்க்குட்டி தாங்க. 

“தேங்காய் தாத்தா, தேங்காய் தாத்தா” என்று கூப்பிட்ட குரலைக் கேட்டு தாத்தா வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தார். 

“பசங்களா! வாங்க, வாங்க” என்று வந்த விஷயத்தைக் கேட்டார். சரி என்று அனைவரும் டாமுவையும் கூட்டிக் கொண்டு இளநீர் பறிக்கச் சென்றார்கள்.

இளநீர் பறிப்பதற்குத் தாத்தா தென்னை மரத்தில் ஏறிக் கொண்டு இருந்தார்

 சீதா, ரகுவுடன் சேர்ந்து நமது டாமியும், தாத்தா மரம் ஏறுவதை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நம்முடைய குறும்புக்கார ரவியோ, தாத்தா மரம் ஏறுவதைப் பார்த்து எதிரே உள்ள அரச மரத்தில் சர சரவென்று ஏறி குரங்கு போலத் தொங்கி வித்தை காட்டினான்.

அதைப் பார்த்த ராமும், கார்த்தியும் “டேய்! டேய்! ரவி, உன்னுடைய குறும்பு வேலைக்கு அளவே இல்லாம போச்சு, இரு! இரு! இன்றைக்கு உன் அம்மாவிடம் சொல்லி விடுகிறோம் என்று சொல்லி எச்சரித்தார்கள்.

அந்த மரத்தின் பொந்தில் குடியிருந்த ஆந்தையும் மேல் கிளையில் உட்கார்ந்திருந்த குருவியும் கூட என்ன சத்தம் என்று எட்டிப் பார்த்தது.

சரி! சரி! நான் கீழே இறங்கி விடுகிறேன், “என் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள்”  என்று சொன்னபடி சர சரவென்று கீழே இறங்கி, நான் இனிமேல் குறும்பு செய்ய மாட்டேன் என்று நண்பர்களிடம் உறுதியாகச் சொன்னான்.

நமது தேங்காய் தாத்தாவும் இளநீர் பறித்து விட்டு கீழே இறங்கி விட்டார். அனைவரும் சந்தோசமாக இளநீர் குடித்தார்கள். அப்போது நமது “தேங்காய் தாத்தா” சொன்னார், “உங்களைப் பார்க்கும் போது எனக்கு ஒரு திருக்குறள் ஞாபகம் வருகிறது”. 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு

பொருள் :

“ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதே சிறந்த நட்பு”

இந்தக் குறளில் வருவது போல ரவி மரத்தில் ஏறி குறும்பு செய்த போது நண்பர்களாகிய நீங்கள் அப்படியே விட்டு விடாமல் அவனைக் கண்டித்து கீழே வரச் சொன்னீர்கள். அது தான் மிகச் சிறந்த நட்பு என்று குழந்தைகளைப் பாராட்டினார்.